முதியோர் தலைமுறையினரின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, சமூகத்திற்கு சுமையாக இல்லாமல் நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்பு வழங்குவதற்கு மூத்த பிரஜைகளால் முடியும் என கேகாலை மாவட்டச் செயலாளர் திரு. கே. ஜீ. எஸ். நிஷாந்த தெரிவித்தார். சர்வதேச முதியோர் தினத்தைக் கொண்டாடும் வகையில் இன்று (21) நடைபெற்ற “மூத்தோர் அபிமான் – 2026” கேகாலை மாவட்ட முதியோர் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மாவட்டச் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.

முதியவர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பேணுவதற்காக அவர்கள் சுறுசுறுப்பாகச் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இதற்குத் தேவையான ஆதரவை வழங்கி, முதியவர்கள் சமூகத்தில் சுறுசுறுப்பாகப் பங்களிப்புச் செய்வதை ஊக்குவிக்கும் முதியோர் சங்கங்களின் முக்கிய பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

மாவட்டத்தின் பல்வேறு முதியோர் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட மூத்த பிரஜைகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், பாடல்கள் மற்றும் பாரம்பரிய நடனத் திறமைகள் “மூத்தோர் அபிமான்” மேடையில் மிகவும் கோலாகலமாக அரங்கேற்றப்பட்டன.

மேலும், இந்நிகழ்வின்போது பல்வேறு பாராட்டு மற்றும் கௌரவிப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதன்போது, சுறுசுறுப்பாகச் செயற்படும் கிராமியக் குழுக்கள் மற்றும் பிரதேச முதியோர் சங்கங்கள் கௌரவிக்கப்பட்டதுடன், “கீ தெஹென” கவியரங்கில் பங்கேற்ற கவிஞர்கள், “சத்யாலோக” பொசன் வலயத்தில் பக்திப் பாடல்களைப் பாடிய பாடகர்கள், மகளிர் தின நிகழ்ச்சியில் பாத்திரமேற்று நடித்த கலைஞர்கள் மற்றும் “தத் ஹெடவுணி – ததக் பிந்துணி” மேடை நாடகத்தில் பங்களிப்புச் செய்த கலைஞர்கள் ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

“நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான எமது அணுகுமுறைகள் குறித்து மீண்டும் சிந்திப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை முதியோர் தின விழா கேகாலை நகர மண்டப வளாகத்தில் நடைபெற்றது. தேசிய முதியோர் செயலகம் மற்றும் சபரகமுவ மாகாண சபையின் சமூக சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் நடைபெற்ற இவ்விழாவை கேகாலை மாவட்டச் செயலகமும் மாவட்ட முதியோர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்வில் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி திருமதி சாகரிகா அத்தாவுத, கேகாலை மாநகர முதல்வர் திரு. நிமல் கருணாரத்ன, மாவட்ட அரசியல் அதிகார சபையின் பிரதிநிதிகள், கேகாலை மேலதிக மாவட்டச் செயலாளர் திருமதி குசும் பண்டார, கேகாலை பிரதேச செயலாளர் திருமதி ஷியாமளி பியதிஸ்ஸ உள்ளிட்ட சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள், மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி திலானி குமாரி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பிரிவின் உத்தியோகத்தர்கள், மாவட்டத்தின் பல்வேறு அரச நிறுவனங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச முதியோர் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவிலான மூத்த பிரஜைகள் கலந்துகொண்டனர்.