நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரின் பங்களிப்பு அளப்பரியதாகும். வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர் சமூகம் வெளிநாட்டுப் பண அனுப்புகைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்வதைப் போன்று, நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பின் முதுகெலும்பாக விளங்கும் இத்தொழில்முனைவோரும் நாட்டிற்கு மகத்தான சேவையினை ஆற்றி வருகின்றனர்.
இவ்வாறு நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை அறிவூட்டும் நோக்கிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்று (26) கேகாலை உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தின் கூட்ட மண்டபத்தில் கேகாலை மாவட்டச் செயலாளர் திரு. கே. ஜீ. எஸ். நிஷாந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கேகாலை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட தொழில்முனைவோருக்கு ஏற்றுமதி நடைமுறைகள், ஆவணப்படுத்தல், விலை நிர்ணயம், செலவுக் கணக்கீடு மற்றும் ஏற்றுமதி நிதியளிப்பு தொடர்பாக இதன்போது அறிவூட்டப்பட்டது.
நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்பத்தில் வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலாளர், தற்போது நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டக் கைத்தொழில் சபைகள் நிறுவப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். கேகாலை மாவட்டத்திலும் இவ்வாறான தொழில்முனைவோரை அதிகளவில் உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளவர்களைப் பாதுகாத்து மேலும் வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஏற்றுமதிக் கைத்தொழில் உள்ளிட்ட மாவட்டத்தின் ஏனைய கைத்தொழில் துறைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மாவட்டக் கைத்தொழில் சபை நிறுவப்பட்டுள்ளதாகவும், கைத்தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடி அவற்றுக்குப் பொருத்தமான தீர்வுகளை வழங்குவதே அதன் பிரதான நோக்கமாகும் என்றும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் கேகாலை மாவட்டச் செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இவ்வொருநாள் செயலமர்வின் வளவாளர்களாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் கண்டி மத்திய மாகாண அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு. ஜே. எச். டி. கே. ஜயலத் மற்றும் உதவிப் பணிப்பாளர் திரு. எம். எஸ். எம். ஃபாஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, பிரதிப் பணிப்பாளர் திரு. ஜே. எச். டி. கே. ஜயலத் அவர்களால் “விலை நிர்ணயம், செலவுக் கணக்கீடு மற்றும் ஏற்றுமதி நிதியளிப்பு” எனும் தலைப்பில் விரிவுரை நிகழ்த்தப்பட்டதுடன், உதவிப் பணிப்பாளர் திரு. எம். எஸ். எம். ஃபாஹிம் அவர்களால் “ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஆவணப்படுத்தல்” எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதிப் பணிப்பாளர் திரு. ஜே. எச். டி. கே. ஜயலத், தற்போது நாட்டில் சுமார் 4,500 ஏற்றுமதியாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்து வருவதாகக் குறிப்பிட்டார். அவர்களில் சுமார் 10 சதவீதத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 453 பெரிய அளவிலான ஏற்றுமதியாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, ஏற்றுமதித் துறையில் எஞ்சியுள்ள சுமார் 90 சதவீதத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 4,000 அளவிலான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதியாளர்கள், அத்துறையின் எஞ்சியுள்ள 10 சதவீத பொருளாதாரப் பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதிப் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் அவர்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்கும் நோக்கில் தொடர் நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கமைய, ஒவ்வொரு வருடமும் தெரிவுசெய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட தொழில்முனைவோருக்காக ஐந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஏனைய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளுமாறு இதன்போது பங்கேற்பாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில் கேகாலை மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) திரு. திலீப் நிஷாந்த மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஏற்றுமதி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஏ. கே. கௌஷல்யா ஜயவர்தன மற்றும் பிரதேச செயலகங்களின் ஏற்றுமதி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து இச்செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
























